அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆணைக்குழு தனக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகளை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தான் முன்வைத்துள்ள மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் செயற்பட்ட ஊழல் தடுப்பு செயலகம் தொடர்பாக பிரதிவாதிகள் விசாரணை ஒன்றை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் சுயாதீனமாக வாக்குமூலம் பெறாமல் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் தடுப்பு செயலகம் அமைச்சரவை மூலம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதன் செலவுகள் சட்டத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.