பேஸ்புக் ஊடாக பழகிய நண்பியின் இல்லத்தில் 3 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை அபகரித்தார் என்ற சந்தேகத்தில் 24 வயதுடைய யுவதி ஒருவர் மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சீதுவ பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பிறிதொரு யுவதியுடன் நண்பியாகியுள்ளார்.
இந்த நிலையில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியை கடந்த ஜனவரி மாதமும், கடந்த வாரமும் தனது வீட்டு வருமாறு சீதுவ பிரதேச யுவதி அழைத்துள்ளார்.
அவரின் அழைப்புக்கேற்ப சீதுவ யுவதியின் வீட்டுக்குச் சென்ற மினுவாங்கொட யுவதி குறித்த வீட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளதோடு, கடந்த வாரம் 3 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 3 1/2 பவுண் தங்க சங்கிலியையும் அவர் அபகரித்துச் சென்றுள்ளதாக சீதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் இன்றைய தினம் (02) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும்போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.