January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட்டின் மைத்துனர் மீது இன்னுமொரு குற்றச்சாட்டு!

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மற்றுமொரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீனின் மனைவின் சகோதரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த வீட்டில் பணிபுரிந்த 22 வயது பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 29 வயதுடைய மற்றுமொரு பெண்ணையும் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி ஹிஷாலினிக்கு முன்னர் அந்த வீட்டில் 10 பெண்கள் பணியாற்றியுள்ள நிலையில் அவர்களில் இருவர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய 8 பேரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது, 2009 – 2010 காலப்பகுதியில் குறித்த வீட்டில் பணியாற்றியுள்ள 29 வயதான பெண் தன்னை குறித்த நபர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.