வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளி இராதாகிருஷ்ணன் சிவகுமார் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நிரந்தர ஊழியரான தன்னை 2015 ஆம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்து 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி மீண்டும் வேலையில் அமர்த்தியதாகவும், 2018 ஆம் ஆண்டு தான் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தான் பிரதேச சபையுடன் முரண்பட்ட போது, வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தை நாட ஆலோசனை வழங்கியதாகவும், தான் நீதிமன்றத்தை நாடிய போதும், பிரதேச சபையினர் நீதிமன்றத்துக்கு சரியான முறையில் சமுகமளிப்பதில்லை என்றும் இராதாகிருஷ்ணன் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மூன்று வருடங்களாக தான் விசாரணைகள் எதுவுமின்றி, வேலையும் இன்றி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர் 2018 ஆம் ஆண்டு வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகக் கூறியே, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எவ்வித விசாரணையும் பணிநீக்கம் செய்யப்பட்டு, வேலை இன்றி இருப்பதால் மன விரக்தி அடைந்து, சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இராதாகிருஷ்ணன் சிவகுமார் தெரிவித்துள்ளார்.