சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்கிறது.
தமது தொழிற்சங்கப் போராட்டத்துடன் இணைந்ததாக நாடுபூராகவும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மன்னார் மற்றும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.
இதன்படி மன்னார் மாட்ட ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன்னால் இருந்து பேரணி நடத்தப்பட்டது.
வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமான பேரணி, பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து மன்னார் நகர சபை வீதியூடாக மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தது.
இதன் போது 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்குதல், இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் ஆசிரியர் சங்கங்களினால் மற்றுமொரு ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.
காந்தி பூங்காவில் இருந்து மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டம், கோட்டமுனை பாலம் ஊடாக பொலிஸ் நிலையத்தின் முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் காந்திப்பூங்கா வரை பேரணி நடத்தப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.