கொழும்பு சிறுவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்து அறிந்து முறையான சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, இலங்கையில் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாக சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 30 சிறுவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்றும் நேற்றைய தினம் முடிவடைந்த வாரத்தில் 80 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் குணமடைந்த பின்னர் பல்வேறு நோய்க்குள்ளாக வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் சிறுவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.