January 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை எதிர்வரும் மாதங்களில் மோசமான கொரோனா பரவலைச் சந்திக்கும்’: பேராசிரியர் மலிக் எச்சரிக்கை

இலங்கை எதிர்வரும் மாதங்களில் மிக மோசமான கொரோனா பரவலைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் மலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார்.

ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான பேராசிரியரான மலிக் பீரிஸ், இலங்கை விஞ்ஞான மன்றம் நடத்திய இணையவழி கலந்துரையாடலில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று மீண்டும் மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் பேராசிரியர் மலிக் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வைரஸ், தற்போது ஏனைய நாடுகளையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் இலங்கை பயங்கரமான கொரோனா பரவலைச் சந்திக்கும் என்ற விடயத்தை தான் எச்சரிக்காவிட்டால், அது தான் கடமையில் இருந்து தவறியதைக் குறிக்கும் என்று பேராசிரியர் மலிக் தெரிவித்துள்ளார்.