January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தீர்வு கிடைக்காது பாடசாலைக்கு போக மாட்டோம்’: ஆசிரியர் சங்கங்கள்

அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கேற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் கல்விசார் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஆனபோதும் ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், குறித்த சுற்றுநிருபத்தை ஏற்று பாடசாலைகளுக்கு செல்ல மாட்டோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடருவோம் என்று அந்த சங்கங்கள் கூறியுள்ளன.

இதேவேளை கடந்த வாரத்தில் பிரதமருடனான சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டவாறு இன்றைய தினத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இன்றைய தினத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள அதிபர், ஆசிரியர்களை கொழும்புக்கு அழைத்து பாரிய போராட்டமொன்றை நடத்துவோம் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.