January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊர்காவற்றுறை–காரைநகர் கடற்பாதை சேவை மீண்டும் ஆரம்பம்

காரைநகர்–ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதையின் திருத்த வேலைகள் நிறைவுற்றுள்ளமையால் குறித்த பிரதேசங்களுக்கிடையிலான கடற்பாதை சேவை திங்கட் கிழமை (02)முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன், குறித்த இரு பிரதேசங்களையும் இணைக்கும் குறுகிய தூர இடைவெளியிலான கடற்பரப்பில் கடற்பாலம் அமைப்பதற்கான கோரிக்கையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

குறித்த கடற்பாதை கடுமையாக சேதமடைந்திருந்தமையால் அடிக்கடி பழுதடைந்து சேவை தடைப்பட்டு வந்தது.இந்நிலையில் குறித்த போக்குவரத்து மார்க்கத்தை திருத்தி தருமாறு என்னிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் இவ்விடயம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அத்துடன் குறித்த கடற்பாதைக்கு பதிலாக கடற்பாலம் அமைப்பதற்கான கோரிக்கையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைத்திருந்தேன்.

இந்நிலையில் குறித்த கடற்பாதையின் திருத்த வேலைகள் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குறித்த கடற்பாதையில் தற்போது திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில்,ஊர்காவற்றுறை இறங்கு துறையில் சேவைக்கு தயாரான நிலையில் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்திருந்தது.

இதையடுத்து திங்கட்கிழமை முதல் குறித்த கடற்பாதை சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையில் இந்த கடற்பாதை சேவையினால் குறித்த இரு பிரதேசங்களினதும் போக்குவரத்து தொடர்புகள் குறுகிய நேர அளவில் முன்னெடுக்கக்கூடியதாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.