November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாத் பதியுதீனை சந்தேகக் கண்கொண்டே அணுகுகின்றோம் என்கிறது எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாது அவர் தொடர்பில் கட்சியாக தீர்மானம் எடுக்க முடியாது. ஆனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது சந்தேகக் கண்கொண்டே நாம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ரிஷாத் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்,அதில் அவர் குற்றவாளியென உறுதிப்படுத்தப்பட்டால் அதன் பின்னர் ரிஷாத் தொடர்பில் கட்சியாக தீர்மானம் எடுப்போம்.இதற்கு முன்னரும் அவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன,நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சில குற்றங்களும் இடம்பெற்றுள்ளமை உண்மையே.

ஆனால் அவையெல்லாம் முன்னைய ஆட்சியில் ராஜபக்ஷவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களாகும்.அதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிறுமி ஹிசாலினி விவகாரத்தில் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர் மீதான சந்தேகத்துடன் தான் நாம் கருத்துக்களை முன்வைத்தும் வருகின்றோம்.அவரது குடும்பத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது, அவை தொடர்பில் ஏனைய சில வாக்கு மூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை பாரதூரமான குற்றங்களாக இன்று வெளியாகிக் கொண்டுள்ளது. ஆகவே ரிஷாத் பதியுதீன் குற்றவாளி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்த சந்தேகம் எம்மத்தியிலும் உள்ளது.அதில் மாற்றம் இல்லை.

ஆனால் உண்மைகளை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.அரசாங்கம் சுயாதீனமாக செயற்பட்டு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.ஆனால் இதனை வைத்துக் கொண்டு இனவாத அரசியலை செய்ய எவரும் முயற்சிக்கக்கூடாது.அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுப்பதாக சந்தேகமும் எமக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.