June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபாயகரமான கட்டத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது; வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

கடந்த ஒருவார கால தரவுகளுக்கு அமைய மிக மோசமான கொவிட்-19 வைரஸ் பரவலொன்று நாட்டில் காணப்படுவதாகவும், தற்போது இறுக்கமான தீர்மானங்களை எடுக்காவிட்டால் தாக்கங்களில் இருந்து மீள முடியாத நிலையொன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என சுகாதார, வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் ஏற்படும் அவதானமொன்று காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி பயணிக்கின்றது, கடந்த இரண்டு தினங்களில் இரண்டாயிரத்தையும் தாண்டிய கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம், 29 ஆம் திகதிகளில் மாத்திரம் 124 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஜூலை மாதம் முழுவதிலும் 1303 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இப்போது வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்பை நாட்டின் அச்சுறுத்தல் நிலையென்றே கருதுகின்றோம்.இது தொடர்ந்தால் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்.அதுமட்டுமல்ல அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்களில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

நாடு முழுமையாக திறக்கப்படுவது இப்போது சாத்தியப்படாத விடயமாகும்.நாடு திறக்கப்பட்டால் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.எனவே நாடு திறக்கப்படும் என்ற அரச அதிகாரிகளின் தீர்மானங்களை பிற்போடுமாறே நாம் கூறியுள்ளோம்.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் கூட்டம் கூடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், நிகழ்வுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் வைரஸ் பரவல் வேகமாக பரவக்கூடிய நிலையொன்று உருவாகும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இது குறித்து கூறுகையில்,

மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலையொன்று காணப்படுகின்றது. இந்தியாவின் நிலையே இன்று இந்தோனேசியாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதே நிலைமை இன்று இலங்கைக்கும் ஏற்படும் அவதானமொன்று காணப்படுகின்றது.

நாளாந்தம் இரண்டாயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது சாதாரண விடயமென கருதினால் அதுவே இலங்கையை மிக மோசமான விதத்தில் பாதிக்க காரணமாக அமையும். கடந்த மே மாதத்தின் நிலைமையே இப்போதும் காணப்படுகின்றது. இது தொடர்ந்தால் முழு நாடும் டெல்டா தொற்றுக்கு உள்ளாகி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அவாதானம் உள்ளது. அதேபோல் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசியை ஏற்றுவது அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.