நாடு அச்சுறுத்தலான சூழலில் இருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை நீக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எனினும், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அரச ஊழியர்களின் சேவையை கருதி குறைந்த அளவிலான தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
தொடரந்து இவ்வாறு நாட்டை முடக்கிக் கொண்டு, நிறுவனங்களை மூடிக் கொண்டு, மக்களின் பணிகளுக்கு அனுமதிக்காது வீடுகளில் முடக்கி வைக்க முடியாது. நீண்ட காலமாக கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் சுய ஆர்வத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள முன்வந்தால் விரைவாக எம்மால் நெருக்கடி நிலைமையில் இருந்து விடுபட முடியும் என்றார்.
இதற்கமைய மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை பணிக்கு செல்லுதல் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக பஸ்ஸில் பயணிப்பவர்கள் பொலிஸாரினால் மாகாண எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.