July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டை முடக்குவதே தீர்வென்றால் அதனை முன்னெடுக்க நேரிடும்” ; சுகாதார பணியகம் அறிவிப்பு!

நாட்டை முடக்குவதன் மூலமே ‘டெல்டா’ பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை உருவானால் மாற்று வழிமுறை எதனையும் கையாள முடியாது என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எதிர்பாராத விதமான கொவிட் மரணங்களும், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதையடுத்து அவ்வாறான அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில தினங்களில் நாளாந்த கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காட்டுகின்றது. 29 ஆம் திகதி 2460 கொவிட் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதியும் இரண்டாயிரத்தை தாண்டிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதேபோல், மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது மோசமான நிலைமையாகும். சுகாதார வைத்திய நிபுணர்களும் இந்த காரணிகளை சுட்டிக்காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் நாடு இப்போது பாரிய அச்சுறுத்தல் நிலையொன்றில் உள்ளது. டெல்டா வைரஸ் வேகமாக பரவும் நிலையொன்று ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். ஆகவே டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விரைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அதற்கான ஒரே வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை முன்னெடுக்க வேண்டி வரும். அதேபோல் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினால் மீண்டும் கொவிட் நான்காம் அலைக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும்.

மக்கள் மிக கவனமாக சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார வழிமுறைகளையும் சரியாக பின்பற்றி செயற்பட வேண்டும். அனாவசியமான சகல செயற்பாடுகளையும் தவிர்ந்து வீடுகளில் மக்கள் இருப்பது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.