July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுமதியின்றி விழாக்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை!

(File photo)

பேருவளை பாதகொட பகுதியில் உள்ள வீட்டில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி நடத்தப்படவிருந்த விழா பொது சுகாதார பரிசோதகர்களின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருவளை பயாகல – கொரகதெனிய பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  விழா ஒன்றில் சமையல்காரருக்கு கொவிட் தொற்று உறுதியான நிலையில் மேலும் 85 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழா,பேருவளை சுகாதார அதிகாரிகளினால் நிறுத்தப்பட்டதையடுத்து, விழாவிற்காக சமைக்கப்பட்ட உணவுகள் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஜூலை 26 ஆம் திகதி விழாவிற்காக உணவு சமைத்த சமையல்காரருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதுவரை 85 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே, படகொட பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழா நிகழ்வு பொது சுகாதார பரிசோதகர்களின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வீட்டில் உள்ள அனைத்து நபர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, வீட்டின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (01) நடைபெறவிருந்த இந்த விழாவில் 200 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி இது போன்ற விழாவை நடத்துபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.