November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உறவுகளை புதுப்பிப்பதற்காக டெல்லி செல்கிறார் மிலிந்த மொரகொட

புதுடெல்லிக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிப்பதற்காக அதற்கான திட்ட ஆவணத்துடன் இந்தியா பயணமாகவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை,இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீடு,மத தொடர்புகளை மையமாகக் கொண்ட ஒரு திட்ட வரைபுடன் மிலிந்த மொரகொட இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஆவணத்தை மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ மற்றும் புது டில்லி, சென்னை,மும்பையில் அமைந்துள்ள தூதரகங்களின் தூதர்கள் தலைமையிலான குழு தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுடில்லிக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவை நியமிக்க உயர் பதவிகள் குறித்த பாராளுமன்றக் குழு  2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில்,அமைச்சரவை தரவரிசையின் அடிப்படையில் உயர்ஸ்தானிகராக மொரகொடவை நியமிக்க வழங்கப்பட்ட ஒப்புதல் மாற்றியமைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,அந்த செய்திகளை நிராகரித்த இந்தியா,மிலிந்த மொரகொடவை நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கும் முடிவை மாற்றியமைக்கவில்லை என்று கடந்த நவம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் மிலிந்த மொரகொட என்பதும் குறிப்பிடத்தக்கது.