மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார பணியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யும் போது அவற்றுக்கு இடையூறாக செயற்படுதல், ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நிலையில் கைதான சந்தேக நபரை இன்றைய தினம் (01) வாழைச்சேனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.