
இலங்கையின் மேல் மாகாணத்தில் ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி வழங்கும் நிலைமொன்று திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு இன்று காலை 8.30 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை அஸ்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் திட்டம் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்றைய தடுப்பூசி நிலையங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அஸ்ரா செனகா முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள், அது தொடர்பான பதிவு அட்டை மற்றும் அடையாள அட்டையுடன் சென்று குறித்த தடுப்பூசி நிலையங்களில் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.