January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று முதல் புதிய பல்கலைக்கழகமாக இயங்கும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று முதல் தனியான பல்கலைக்கழகமாக இயங்கவுள்ளது.

இதன்படி ‘வவுனியா பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது இயங்கும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த புதிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி டி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு பின்னர் 1997 ஆம் ஆண்டில் இது யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

இந்நிலையில் 2021 ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக அறிவித்து அண்மையில் கல்வி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.

இதன்படி யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் என்ற பெயர் இன்றுடன் நீக்கப்பட்டு இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் எனும் மூன்று கற்கை நெறிகளை கொண்ட பீடங்கள் அமைக்கப்படவுள்ளன.

2021 உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் முதலாவதாக இந்த புதிய பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் வவுனியா வளாகமாக இருந்த காலப்பகுதியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கத்தின் மூலமே பட்டங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.