“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் மிக வேகமாக பரவுகின்றது.நாளாந்த மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.ஆனால்,ராஜபக்ச அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்களும் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளன.விசேடமாக இந்தியாவில் பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று இலங்கையிலும் இனங் காணப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் தொற்று பாரியளவில் பரவிச் செல்லும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.கொழும்பு நகரில் அதிகளவு பரவியுள்ளது. இந்தியா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிக்கொண்டு செல்லும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தை எடுத்துக் கொண்டால் விசேடமாக ஜூலை மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை 1,653 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.கொரோனா மரணங்கள் 48 பதிவாகியுள்ளன.
ஜூலை 27ஆம் திகதி 1,688 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதுடன் 48 மரணங்கள் பதிவாகியுள்ளன.28ஆம் திகதி 1,919 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன், 63 மரணங்கள் பதிவாகியுள்ளன.29ஆம் திகதி 2,329 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன், 65 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஜூலை 30 ஆம் திகதி 2,455 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 55 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசால் வெளியிடப்பட்ட தகவல்களே இவை. இந்த ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதேவேளை, நாளொன்றுக்கு 50 பேர் கொரோனாத் தொற்றால் மரணிக்கும் நிலைமை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 50 என்றால் மாதமொன்றுக்கு 1,500 பேர் கொரோனா தொற்றால் மரணிக்கின்றனர் என்று அர்த்தப்படுகின்றது.
கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையிலுள்ள அநேகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களாவர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி மட்டும் போதுமானதில்லை.கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்துவதால் மட்டும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மீள முடியாது.சுகாதார நிபந்தனைகளையும் பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.