அரசின் பொறுப்பற்ற செயல்களால் ஆசிரியர் சமூகத்தினர் இன்று அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. .
அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை காரணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கிப் போயிருந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் தாமாக முன்வந்து நிகழ்தகை கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்தக் கற்றல் முறைமை நூற்றுக்கு நூறுவீதம் வெற்றியளிக்காத போதிலும் கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டன.
எனினும்,சம்பளக் கோரிக்கையை முன்வைத்து நிகழ்தகை கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளும் வீழ்ச்சியடைவதை போன்று கல்வித் துறையும் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.
ஏனைய நாடுகளில் நிகழ்தகை கற்றல் செயற்பாடுகள்,தொலைக் கல்வி என்பன மிகவும் வேகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அவர்கள் அதற்கு பழக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கற்றலில் ஈடுபடுவதற்கு நமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.தொழில்நுட்பம், தரவு, உபகரணங்கள் இன்மை என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமையிலும்கூட நிகழ்தகை கற்பித்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கும் பாதிப்பை ஏற்படுத்துவது சிறந்த விடயமல்ல.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு ஏன் முன்வரவில்லை? இது நீண்டகாலப் பிரச்சினையாக இருந்தாலும்கூட முன்னிலையில் இருந்து இதற்கு தீர்வொன்றை முன்வைப்பது அரசின் பொறுப்பாகும்.
ஒரே தடவையில் நூற்றுக்கு நூறு சதவீதம் பிரச்சினைக்கு தீர்வை பெற்று க்கொடுக்க முடியாது.எனினும்,நம்பிக்கைக்குரிய உறுதிமொழிகளை வழங்கலாம்.
விசேடமாக இந்தக் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இப்பிரச்சினைக்கு ஒரு நாளில் அல்லது இரண்டு மாதங்களில் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டாலும் கூட நாம் இவ்வாறான வழியில் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருகின்றோம் என்றும் அரசு ஓர் உறுதிமொழியை வழங்குவது அவசியம்.
எனவே, அவ்வாறான உறுதி மொழிகளை வழங்குவதற்குக் கூட அரசு முன்வரவில்லை என்பதே எமது ஆதங்கம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.