July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி இஷாலினி மரணம்; 2வது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று (31) பேராதனை போதனா மருத்துவமனையில் நடைபெற்றது.

கொழும்பு பல்கலைக்கழக தடயவியல் மருத்துவப் பேராசிரியர் முனைவர் ஜீன் பெரேரா, தடயவியல் மருத்துவத் துறை மூத்த விரிவுரையாளர் வைத்தியர் சமீரா குணவர்தன, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் பேராதனை மருத்துவமனையின் சிறப்பு நீதி மருத்துவ அதிகாரி பிரபாத் சேனாசிங்க ஆகியோர் முன்னெடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இஷாலினி உடல் நேற்று (30) தோண்டி எடுக்கப்பட்டு பேராதனை போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்த பிரேத பரிசோதனை மாலை 5.15 வரையில் சுமார் 9 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.

முதலில் சிடி ஸ்கேன் மூலம் உடல் பரிசோதிக்கப்பட்டது. உடலின் உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் உள்ளதா என்பது தொடர்பில் தடயவியல் மருத்துவர் குழு ஆராய்ந்தது.

தொடர்ந்து, விரிவான பரிசோதனைகள் செய்யப்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனைகள் தொடர்பான அறிக்கைகள் வெளியானதன் பிறகு, மரணம் குறித்த முழு அறிக்கை நீதிமன்றத்துக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை உடல் பேராதனை போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குழு இன்று அவிசாவளை – புவக்பிட்டிய மற்றும் களனி ஆகிய இடங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று ஹட்டன் மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.