November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம்; தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானம்

கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸையேனும் ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு சாதாரண பஸ் கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் “டெல்டா” வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன் மொழிந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் எழுத்து பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

நாளை (01) முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தனியார் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

எனினும் பஸ் நுழைவாயிலில்  தடுப்பூசி அட்டையின் பிரதிகளை காண்பிக்க தவறும் பணிகளுக்கு தனி ஆசனம் வழங்கப்படுவதோடு, இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படும்.

சொகுசு பஸ்களில் பயணிப்பவர்களுக்கும் தடுப்பூசி அட்டையின் பிரதி கண்டிப்பானது. எனினும் தடுப்பூசி அட்டை இல்லாதவர் தனி இருக்கையில் பயணம் செய்யும் அதேவேளை, பயணக்கட்டணத்தின் ஒன்றரை பகுதியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்துகளும் நாளை முதல் சேவையில் ஈடுபட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க கூறியுள்ளார்.