இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எனினும், ஆரம்ப கட்டமாக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொவிட் பரவல் மிகவும் கடுமையாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளதையடுத்து, பகல் நேர பொதுப் போக்குவரத்து சேவைகளை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (01) முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி (திங்கள்கிழமை) முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சேவைகளை வழங்க பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பஸ்களின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டும் பயணிகளை கொண்டு செல்லுமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, தனியார் பஸ்களும் நாளை முதல் போக்குவரத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.