July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகந்துரே மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பிரபல போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கியஸ்தரான மாகந்துரே மதுஷ், இன்று அதிகாலை கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் குற்றக் கும்பலொன்றுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் தடுப்புக் காவலில் இருந்த மாகந்துரே மதுஷ், மாளிகாவத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் போதைப் பொருளை மீட்பதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பிரதேசத்தில் மறைந்திருந்த குற்றக் கும்பலொன்று மதுஷை மீட்டுச்செல்லும் நோக்கில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இவ்வேளையில் பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட போது அதற்குள் சிக்கி மதுஷ் உயிழந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலைகள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக பல வருடங்களாக இலங்கையில் தேடப்பட்டு வந்த மாகந்துரே மதுஷ், 2019 பெப்ரவரி 5 ஆம் திகதி துபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் 2019 மே மாதம் 5 ஆம் திகதி அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்திருந்தனர்.

கடந்த 17 மாதங்களாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் இருந்த மதுஷ், கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக மீட்கப்படும் போதைப் பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து 22 கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.