January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொலிஸார் வன்முறைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது’: யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையாற்றுவர் என்று மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே உறுதியளித்துள்ளார்.

ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவரை வேனில் கடத்திச் சென்று பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு பொலிஸார் செயற்பட்டிருந்தால், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

அத்துடன், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பொலிஸார் தமது கடமையை செய்துவரும் நிலையில், இவ்வாறான சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறாக செயற்படுகின்றமை வருந்தத்தக்கது”

என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே கூறியுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த வியாழக்கிழமை வேனில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் இளைஞன் ஒருவரைக் கடத்திச் சென்று, சித்திரவதை புரிந்து, கைத்துப்பாக்கியால் தாக்கி, வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளதாக தாக்குதலுக்குள்ளான இளைஞன் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.