இலங்கை தற்போது எந்த புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் திட்டமிடவில்லை என திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல கூறினார்.
முடிந்தால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சில இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொலைத் தொடர்பு வலையமைப்புகளை கட்டுப்படுத்தினால் இணையத்தின் ஊடான பொருளாதாரம் பாதிக்கப்படும்.
அத்தோடு, பெரும்பாலான உள்நாட்டு தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இறக்குமதி தளர்வுகள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில், தங்கம், மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும், அந்நிய செலாவணியை சேமிக்கவும் அதிக டொலர் வருவாயை பெற ஏற்றுமதியை அதிகரிக்கவும் இலங்கை முயற்சித்து வருவதாக திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல கூறினார்.
2020 ஆம் ஆண்டில் பெரும்பாலான காலப்பகுதியில் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருட்களின் இறக்குமதி வீழ்ச்சியடைந்தது.ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்றார்.