சிறுவர்கள் தொடர்பான சுமார் 100 ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த நபர் ஒருவர் கண்டியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மற்றும் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்களுக்கான தேசிய நிலையம் என்ற விசேட பிரிவின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த குறித்த நபர் சுமார் 100 சிறுவர் ஆபாச வீடியோக்களையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கண்காணிக்கும் வகையில் கடந்த மாதம் கொழும்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்மூலம் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசாரணையின் பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக சந்தேக நபரின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அவர்களிடம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், சிறுவர்களின் எந்தவொரு ஆபாச வீடியோக்களையும் இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், யூடியூப் அல்லது இமோ போன்ற எந்தவொரு சாதனங்களின் மூலமும் பதிவேற்றியவுடன், அவர்களின் ஐபி முகவரி மற்றும் தொலைபேசி எண்களை சில நிமிடங்களிலேயே அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்ட புதிய அலகு தற்போது இருப்பதாகவும் அஜித் ரோஹண கூறினார்.
இதனிடையே, இந்த ஆண்டு ஜூன் 17 முதல் ஜூலை 28 வரை பல்வேறு சாதனங்கள் மூலம் இலங்கையிலிருந்து 17,000 க்கும் மேற்பட்ட வீடியோ காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.