கொவிட் தடுப்பூசியை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பாக இலங்கை முழுவதும் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பு நடவடிக்கை குழுவினருடன் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் துரிதமாக கணக்கெடுப்பை நடத்தி, தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் தொடர்பில் எதிர்வரும் தினங்களுக்குள் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மற்றும் அவர்களை தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்காக ஊக்கப்படுத்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றால் உயிரிழப்போரில் 95 வீதம் வரையிலானோர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவினர் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.