இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானதையடுத்து இதுவரையில் 473 கடல் உயிரினங்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கப்பல் தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் இந்த தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு உயிரிழந்த கடல் உயிரினங்களிடையே 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் அடங்குவதாக தகவல் வெளியிட்டார்.
அத்தோடு உயிரினங்களின் உடல்கள் மேலதிக ஆய்வுக்காக அரச பகுப்பாய்வாளர் மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு அருகில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகள் அரச பகுப்பாய்வாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பகுப்பாய்வில் நீர் மாதிரிகளில் பெட்ரோலிய கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.