
இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று பணிகளுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் வழமை போன்று அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமையினால், அரச சேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு முன்னுரிமையளிக்கப்படவுள்ளது.
இதன்படி கொவிட் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ், 2 ஆம் திகதி முதல், அனைத்து அரச ஊழியர்களையும் வழமைபோன்று கடமைகளுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால், அரச சேவைகள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன், மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிரூபங்களையும் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.