இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய போது, அந்த சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொள்ளும் போது அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சரண குணவர்தனவுக்கு எதிராக கடந்த நல்லாட்சிக் காலத்தில் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் சரண குணவர்தனவுக்கு 2020 இல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ. ராகல முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகிய அதன் அதிகாரிகள் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய ஆவணங்களை முன்வைக்காத காரணத்தினால் குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான விடயம் என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இவ்வேளையில் அவ்வாறு வழக்கை தொடர்ந்து நடத்தி செல்வது கடினமாயின் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு சரண குணவர்தன சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த நீதவான் குறித்த 8 வழக்குகளில் இருந்து சரண குணவர்தனவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.