வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சர்வதேசத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இனிமேலும் தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் கடலினுள் மூழ்கி உயிரை விடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.