July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிஷாலினியின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது!

உயிரிழந்த சிறுமி ஹிஷாலினின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, டயகமவில் புதைக்கப்பட்டிருந்த ஹிசாலினியின் உடல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மூவர் அடங்கிய சட்ட வைத்தியர்கள் குழு மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் வீட்டில் பணி புரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த ஜுட் ஹிஷாலினி என்ற சிறுமி கடந்த 3 ம் திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் சடலம் டயகம தோட்ட மயானத்தில் கடந்த 16 ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை சிறுமியின் தாயார், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும் புதைப்பட்ட மகளின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம், புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பில் நுவரெலியாவுக்கு சென்ற அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிஷாலினியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்ததை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன், இன்று காலை அது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.