
இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதே தமது இலக்கு எனவும்,இலங்கைக்கு தேவையான கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள இதுவரை 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் கொவிட் தடுப்பூசிகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த தடுப்பூசிகளையே நாம் இலங்கையில் பயன்படுத்தி வருகின்றோம்.இந்நிலையில் சினோவெக் தடுப்பூசி அதிகளவான நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிலையிலும் நாம் இலங்கையில் சினோவெக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இலங்கையில் அஸ்ரா செனகா தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.அதற்கான உடன்படிக்கையும் சீரம் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது.எனினும் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகள் காரணமாக எம்மால் எதிர்பார்த்ததை போன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது. இப்போதும் நாம் ஜப்பானிடம் அஸ்ரா செனகா தடுப்பூசிகளை கேட்டுள்ளோம்.
அவர்கள் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் எமக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.அதற்கமைய 7 இலட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்கு இம்மாதம் 31 ஆம் திகதி கிடைக்கும்.அதேபோல் மேலும் 8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் பெற்றுக் கொள்ளும் உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக மையம் கொழும்பில் திறக்கப்பட்ட வேளையில் அந் நிகழ்வில் கலந்துகொண்ட போதே லலித் வீரதுங்க இதனை கூறினார்.