20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசில் இருப்பவர்களில் எவராவது எதிர்த்தால், அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அட்மிரல் சரத் வீரசேகர;
“கொழும்பு மாவட்டத்தில் எனக்குக் கிடைத்த வாக்குகளில் 50 வீதமான வாக்குகள், கடந்த ஆட்சியில் 19ஆவது திருத்தச் சட்டத்தைத் தனியாக எதிர்த்த காரணத்தினாலேயே கிடைத்தன.
19ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று கூறி அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஒரு திருத்தத்தை மேற்கொண்ட பின்னர், அது முழு அரசமைப்புச் சட்டத்தில் ஒரு பகுதியாக மாறும். இதன் பின்னர் கொண்டு வரும் திருத்தங்களில் ஒவ்வொன்றாக நீக்கப்படும்.
19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை வைத்துக்கொள்வதில் தடையில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.