
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனியில் வசிக்கும் சந்தேக நபர் ஆறு மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்து பெற்றுத் தருவதாக கூறி பதுளை பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து பணத்தை மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த சந்தேக நபர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரிடம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் எனக் கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காட்டி ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதுடையவர் என்றும் குறித்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.