File Photo
காதல் விவகாரத்தால் சக பெண் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்திய நபர், தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆண், அந்தத் திணைக்களத்தில் பணியாற்றி வரும் சக பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாகவும், அவரின் காதலை பெண் உத்தியோகஸ்தர் ஏற்க மறுத்து வந்த நிலையிலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த நபரின் தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும், அந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆண் உத்தியோகஸ்தரை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் அலுவலகத்தில் இருவரும் கடமையில் இருந்த நேரத்தில் திடீரென ஆண் உத்தியோகஸ்தர், பெண் உத்தியோகஸ்தர் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு, அலுவலக மலசல கூடத்திற்குள் சென்று கதவை மூடிக்கொண்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து அங்கு கடமையில் இருந்த சக உத்தியோகஸ்தர்கள் காயத்துக்கு உள்ளான பெண் உத்தியோகஸ்தரை, மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதேவேளை , அப்பகுதியால் சிவில் உடையில் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் அறிந்து அலுவலகத்திற்குள் சென்று இருந்த போது , கத்தியால் வெட்டிய நபர் மலசல கூடத்திற்குள் தாழிட்டு இருப்பதனை அறிந்து, அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.
எந்த சத்தமும் இல்லாத நிலையில் கதவினை உடைத்து திறந்த போது, அந்நபர் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.