January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையத்தில் சிறுவர் ஆபாசக் காட்சிகளை பதிவேற்றுவோரை கைது செய்ய நடவடிக்கை!

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றும் நபர்களை கண்டறிய விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் 17 ஆம் திகதி முதல் ஜுலை 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் சிறுவர்களுடன் தொடர்புடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றிய 17,629 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இவ்வாறானவற்றை இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறித்த வீடியோ மற்றும் படங்களை பதிவேற்றும் நபர்களின் தொலைபேசி இலக்கம், அவர்கள் அதற்காக பயன்படுத்தும் கணிணி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் தொடர்பான தகவல்களை சீஐடியினர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே பொலிஸ் பேச்சாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.