November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான நிபுணர் குழுவின் தலைவராக பேராசிரியர் சுதந்த லியனகே நியமனம்

photo:sjp.ac.lk

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற விசேட குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அந்த நிபுணர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி அனுர கருணாதிலக்க,சட்டத்தரணி சுரேன் பர்னாந்து,பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற விசேட குழு கூட்டத்தின் போது அதன் தலைவர் தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 21 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,பொதுமக்கள் மற்றும் 155 சிவில் அமைப்புகளினால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் செயலாளர் பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.