
இலங்கை கடல் எல்லைக்குள் அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமையால் ஏற்பட்ட கடல் அனர்த்தம்,அதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை பரிசீலித்து தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைக்க வேண்டுமென்ற பிரேரணையொன்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன்,இது எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் சபாநாயகரினால் இது குறித்த அறிவிப்பு விடப்படும்.
கடந்த ஜூன் 22 ஆம் திகதி கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமை இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் சுற்றுச்சூழல் அனர்த்தம் எனவும்,இவ் அனர்த்தம் கடல்சார் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை அழித்துள்ளதுடன், நாட்டிற்கு பாரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியிருப்பதாலும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதே இந்தக் குழுவின் நோக்கம் எனவும் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல்,எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமையால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கணிப்பீடு செய்வது,இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையை கணித்தல்,அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் நிதி நிவாரணம் மற்றும் ஏனைய இழப்பீடுகளை விதப்புரை செய்தல், இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடல்சார் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்கீழ் சுற்றாடல் ஆகியவற்றின் அளவு மதிப்பிடல் போன்றவை இந்தக் குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.