கொவிட் -19 வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான தேவை ஏற்படின் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக் கொண்டவர்களுக்கு துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து ஆராயப்படுவதாகவும் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஆனால் இது சமூக பரவல் என நாம் ஒரு நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.இப்போது அவ்வாறான தீர்மானத்தை அறிவிக்கவும் முடியாது.ஆனால் நாடு அச்சுறுத்தல் நிலையில் உள்ளதென்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்ற போதிலும் அவ்வாறான தட்டுப்பாடு இல்லை.இந்தியாவை போன்று பாரதூரமான நிலையொன்றை நாம் இன்னமும் அடையவில்லை. தேவையான நோயாளர்களுக்கான ஒட்சிசன் எம்மிடம் உள்ளது. மேலதிகமாகவும் உள்ளது.ஆகவே இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் கூறியுள்ள அவர், டெல்டா வைரஸ் தொற்றாளர்களுக்கே அதிகளவில் ஒட்சிசன் தேவைப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.