November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை எந்த அரசும் ஏற்படுத்தவில்லை என்கிறார் மைத்திரிபால சிறிசேன

“நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அத்தனை அரசுகளும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு – டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை ஊடகங்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், தேசிய நல்லிணக்கம் பற்றியும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

‘கடந்த 70 வருடங்களாக ஆட்சியிலிருந்த அத்தனை அரசுகளும் மேற்கொண்ட திட்டங்கள் சில வெற்றியளித்தன.சில திட்டங்கள் தோல்வியடைந்தன.ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காகப் பாடுபட்டனர்.இருப்பினும் ஆட்சியின் போது பலவித பலவீனங்களும் ஏற்பட்டன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை குறிப்பிட்ட அரசு ஒன்றுக்கு எதிரானதாகக் கூற முடியாது.எமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் 5 ஆண்டுகள் முடியும்போது தேர்தலுக்கு செல்கின்றன.அதற்குள் 3 ஆண்டு திட்டங்களையே வகுக்கின்றன.

ஆனால், அபிவிருத்தியடைந்த நாடுகள் 30 ஆண்டு,50 ஆண்டு திட்டங்கள் என வகுத்துள்ளன.நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் தேசிய கொள்கை மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானதாகும்.

ஆனால், இதுவரை இருந்த அரசுகள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டன.தேசிய கொள்கை, சுகாதாரம்,சர்வதேச தொடர்பு என திட்டங்களும் நீண்ட நாட்களுக்கு அவசியமாகும். இவை இருந்தாலும் தேசிய நல்லிணக்கம் என்பது இல்லாவிட்டால் ஒன்றுமே எஞ்சியிருக்காது.

இதேவேளை, ‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

“தற்போது அதிகளவிலான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் கிடைத்திருப்பதால் அவர்களுக்கு இடமளிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.