July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாணத்தில் கொரோனாவுக்கு 11,800 பேர் பாதிப்பு; 164 பேர் பலி

கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போது வரை வட மாகாணத்தில் 11,800 பேர் தொற்றுக்குள்ளானதுடன், 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தை பொறுத்தவரை கொவிட்-19 நிலைவரம் என்பது கடந்த ஜனவரி மாதம் முதல் தொற்று படிப்படியாக ஆரம்பித்து ஜூன் மாதத்தில் 3,594 என அதிகூடிய தொற்றாளர்கள் வட மாகாணத்தில் இனம் காணப்பட்டனர்.

அதற்கு பின்னர் ஜூலை மாதத்தில் அந்த பரம்பல் குறைவடைந்து தற்போது வரை 2241 தொற்றாளர்கள் வட மாகாணத்தில் இனங்காணப்பட்டனர்.அவர்களில் யாழ்ப்பாணத்தில் 1549 பேரும் வவுனியாவில் 176 பேரும் மன்னாரில் 168 பேரும் கிளிநொச்சியில் 220 பேரும் முல்லைத்தீவில் 128 பேரும் தொற்றாளராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11,800 பேர் தொற்றுக்குள்ளாயினர்.

அதில் யாழ்ப்பாணத்தில் 7,025 பேரும் வவுனியாவில் 1607 பேரும் மன்னாரில் 977பேரும் கிளிநொச்சியில் 1215 பேரும் முல்லைத்தீவில் 876 பேரும் தொற்றாளராக இனங் காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாவினால் தற்போது வரை வட மாகாணத்தில் 164 பேர் உயிரிழந்தனர்.அதில் யாழ்ப்பாணத்தில் 122பேரும் வவுனியாவில் 23 பேரும் மன்னாரில் 8 பேரும் கிளிநொச்சியில் 4 பேரும் முல்லைத்தீவில் 7 பேரும் உயிரிழந்தனர்.

சில வாரத்துக்கு முன்பு கொரோனா சம்பந்தமான சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.அதற்கு பின்னர் குறிப்பாக இந்து ஆலயங்களில் பெருமளவான சுகாதார நடைமுறையை மீறி திருவிழாக்கள் நடைபெற்றன.அதற்குப் பின்னர் கொரோனா கொத்தணி பல இடங்களில் உருவாகி இருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் கூட கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவுக்கு பின்னர் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை பின்பற்றி கொண்டு ஆலயங்களில் ஆகக்கூடியது நூறு பேர்தான் கூட முடியும்.உள் பிரகாரத்தில் மட்டுமே திருவிழாவை நடத்த முடியும்.அந்த நூறு பேர் என்பது கூட இடவசதி,சமூக இடைவெளியோடு இருக்குமா என்பதை பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

அது தொடர்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி இருக்கவேண்டும்.ஆலய வெளிவீதிகளில் எந்தவிதமான திருவிழாக்கள் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. திருவிழாக்களின்போது அன்னதானம் வழங்கவோ,தண்ணீர் பந்தல் அமைக்கவோ நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவோ தற்போது அனுமதி கிடையாது.

டெல்டா தொற்று பரவலடைந்து வரும் நேரத்தில் தேவையற்ற விழாக்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக நாங்கள் விரைவில் அறிவித்தலை வெளியிடவுள்ளோம்.

இதேபோன்று திருமணம்,பூப்புனித நீராட்டு விழா,பிறந்தநாள் விழாக்களை மண்டபங்களிலோ அல்லது தங்களது வீடுகளிலோ நடத்துவது தொடர்பிலோ சுகாதார வைத்திய அதிகாரியினுடைய அனுமதி வேண்டும்.மண்டபங்களின் இட வசதிக்கேற்ப சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.இவற்றை சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.