
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து அவரின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30) தோண்டி எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில் 2 வது பிரேத பரிசோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தால் குழு நியமிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த மருத்துவக் குழுவிற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் பேராசிரியர் ஜீன் பெரேரா தலைமை தாங்குகின்றார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தடயவியல் மருத்துவ துறையின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரபாத் சேரசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.