July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சஜித் தெரிவிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (28) புதன்கிழமை குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த சஜித், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதை விடுத்து இவ்வாறான அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.