இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல இரத்தினக்கல்லான ‘செரண்டிபிட்டி சபெயார்’ சீனாவின் இரத்தின கல் ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினக் கல் உரிமையாளரின் விருப்பத்திற்கு அமைய அதனை சீனாவில் ஏலத்தில் விற்க உள்ளதாக இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் துறை அமைச்சர் லோகன் ரத்வத்த டெய்லி மிரர் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன்பு இரத்தினக்கல்லின் பெறுமதியை மதிப்பிடும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரத்தினக்கல்லின் விற்பனை பெறுமதியிலிருந்து 10 சதவீத பணத்தை அரசு பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கிணறு வெட்டும் போது இந்த அரியவகை இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை அறிவித்திருந்தது.
510 கிலோ கிராம் எடையுடைய இந்த வெளிர் நீல நிற இரத்தினக்கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையது என்று இரத்தினக்கல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.