இலங்கையில் உணவுப் பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீனுக்கான தடை எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை என இரண்டும் தடை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் எதுவும் வெளியிட அவசியமில்லை என்றும் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை செயற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு உக்காத பொலித்தீன் பொருட்கள் மீது தடை விதிக்கப்பட்டாலும், அந்த தடை முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் வரையான உணவுப் பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன், சுற்றாடலுக்கு சேர்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலித்தீன் தடை அமுலுக்கு வந்ததும், அதனைக் கண்காணிப்பதற்கான விசேட நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.