January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையம் ஊடான கற்பித்தலில் இருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் விலகினர்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி இன்று முதல் இணையம் ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்போம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பள முரண்பாட்டு பிரச்சனையை முன்வைத்து பாடசாலை ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நேற்றைய பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.

அதற்கமைய, தாம் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.