“வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் சமன் பந்துல சேனவினுடைய நியமனத்தை திரும்ப பெற்று தமிழ் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்களது மொழியிலே நிர்வாகத்தை முன்னெடுக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு நாங்கள் அரசைக் கோருகின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் சமன் பந்துல சேனவின் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.ஜனாதிபதியின் இந்த நியமனத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
வடக்கு,கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள்.அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும்,தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் சிங்கள அதிகாரியான சமன் பந்துல சேனவினுடைய நியமனத்தை திரும்பப் பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்களது மொழியிலே நிர்வாகத்தை முன்னெடுக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு நாங்கள் அரசைக் கோருகின்றோம்.
மாகாண சபையின் பிரதம செயலாளர் பதவிக்கு தமிழ் மக்கள் மத்தியில் தகுதியுடைய எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். சித்தியடைந்தவர்கள்,அனுபவம் மிக்க ஆளுமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள்.அவர்களிலிருந்து ஒருவரை பிரதம செயலாளராக வடக்கு மாகாண சபைக்கு நியமிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
அரசும்,ஜனாதிபதியும் தன்னிச்சையாகவும்,ஜனநாயகத்திற்கு விரோதமாகவும்,நடைமுறைகளுக்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல் இருப்பதற்கு நாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
எங்களுடைய தேசத்தில் நாங்கள் எங்களை ஆளுவதற்கும், எங்களுடைய பண்பாடு,மொழி,கலை,கலாசாரங்களை நாங்களே கையாள்வதற்கும்,எங்கள் மக்களையும்,தேசத்தையும், ஆட்சி உரிமையையும் பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றாக அணிவகுத்து செயற்பட வேண்டும் என்பதையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு வடக்கின் புதிய பிரதம செயலாளரை மாற்றி தமிழ் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய தலைமை நிர்வாகி ஒருவரை நியமிப்பதற்கு அரசுடன் பேச வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றோம்.
அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்”என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.