January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாமே தீர்மானிக்கும் சக்தி; ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த சகல அதிகாரங்களும் உள்ளது.அதனை நாம் எப்போதும் தடுக்க நினைத்ததில்லை.ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு பங்காளிக் கட்சி என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர் எம்முடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு சிலர் கட்சிக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெளிப்படையாக தெரிகின்றது.

தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகள் நகைப்புக்குரியது எனவும்,நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும்.ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும் இவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்த தவறும் இல்லை.அதனை நாம் கேள்வி கேட்கவும் முடியாது.

ஆனால்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தமது பழைய நிலைப்பாட்டில் உள்ளனர்.அதாவது இதற்கு முன்னர் அமைத்த அரசாங்கங்களில் அவர்கள் பிரதான கட்சியாக இருந்து கொண்டு ஏனையவர்களை பங்காளிக் கட்சியாக இணைத்துக் கொண்டனர். இந்த அரசாங்கத்திலும் அவர்கள் அதே நினைப்பில் உள்ளனர்.

முதலில் இந்த நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.இந்த அரசாங்கத்தில் நாமே பிரதான கட்சியாக உள்ளோம். ஆகவே முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுக்கும் தீர்மானங்களை ஆதரித்து அரசாங்கத்தை கொண்டு நடத்த அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியுடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலமாக அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்தி அவர்கள் அல்ல.நாமே அரசாங்கத்தின் பலம் என்பதை சகலரும் நினைவில் வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.